நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும்: தினகரன்

தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதான தகுதி நீக்க விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:  தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி  அல்ல.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்  தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்கும் வகையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தை  முதல்வராக்கினார் சசிகலா.  சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அவரே முதல்வராகி இருக்க முடியும். ஆனால்,  இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பதால்தான்  ஓபிஎஸ், இபிஎஸ் முதல்வராக்கப்பட்டனர்.   ஆனால்,  தற்போது துரோகத்தின் ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.   ஆட்சி,அதிகாரம் கையில் இருப்பதால்,  எனக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.எ.க்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருக்கின்றனர்.  நீதிமன்றம் மூலம் நமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். மீண்டும்  எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை உருவாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்.   எம்ஜிஆர் கட்சி தொடங்கியதே  திமுகவை எதிர்த்துதான்.  அதிமுகவின் பிரதான எதிரி திமுகதான். எனவே திமுகவுடன் கைகோக்கும் கேள்விக்கே இடமில்லை.  ஆட்சி கவிழ்ந்த பிறகு எப்போது தேர்தல் வந்தாலும்  மாபெரும் வெற்றியை நாம் பெறுவது உறுதி.  தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்குவோம்.  தமிழகத்தில் ஒன்றரை கோடி அதிமுக உறுப்பினர்களின் எண்ணமும்அதுவாகத்தான் உள்ளது. தமிழக ஆளுநர்,  பெரும்பான்மையை நிரூபிக்க  எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்.  இந்த கட்சியைக் காப்பாற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் போராளிகளாக கடந்த ஒரு மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.   கடைசி மூச்சு உள்ளவரை நீட் தேர்வை எதிர்த்தவர் ஜெயலலிதா:  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடைசி உயிர் மூச்சு  இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வேண்டாம் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.  69 சதவிகித இட ஒதுக்கீடு  பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா,   சமூக நீதியைக் காப்பதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வு தேவலையில்லை என்றும், மாணவர்களின் பிளஸ் 2 மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் எனக் கூறி செயல்படுத்தியதன்அடிப்படையில்  கிராமப்புற, ஏழை எளியமக்கள் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது.    2011இல் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு நீட் தேர்வை கொண்டு வந்த போதும்,  நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க முடியாதுஎனக் கூறி கடைசிவரை உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என தவறான வாக்குறுதியைக் கொடுத்ததன் விளைவால் அனிதா உயிரிழந்திருக்கிறார்.      இதுபோன்ற நிலைகள் தொடரக்கூடாது என்பதால்,  சமூக நீதி காக்க, மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்தகு விலக்கு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றார் தினகரன். கூட்டத்துக்கு திருச்சி வடக்கு மாவட்டச் செயலரும், அமைப்புச் செயலருமான ஆர். மனோகரன் தலைமை வகித்தார்., மாவட்டச் செயலர்கள் திருச்சி மாநகர் ஜெ.சீனிவாசன், தெற்கு மா.ராஜசேகரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தி, அதிமுகஅமைப்புச் செயலர்கள் நடிகர் செந்தில், சாருபாலா ஆர்,தொண்டைமான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்  வி.பி.கலைராஜன், மேலூர் சாமி  உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மாணவி அனிதாவின் படத்துக்கு தினகரன் மலரஞ்சலி செலுத்தினார்.

Category: